

அரக்கோணம்: அரக்கோணம் அருகே கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர்களுக்கு பயந்து இரும்பு கடை வியாபாரி கடையை மூடிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அடுத்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(39). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் கீழ் பஜார் பகுதியில் ‘சுபம் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் கம்பிகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி இவரது கடை முன்பாக கஞ்சா போதையில் இருந்த 2 இளைஞர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதை கடை உரிமையாளர் முத்துராமலிங்கம் தட்டிக்கேட்டார். உடனே, இளைஞர்கள் கடை உரிமையாளரை மிரட்டிவிட்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து, தக்கோலம் காவல் நிலையத்தில் முத்துராமலிங்கம் புகார் அளித்தார். இதையறிந்த அந்த இளைஞர்கள் கடந்த 12-ம் தேதி நேராக கடைக்கு சென்று, கற்களை வீசி கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா, தராசு தட்டு ஆகியவற்றை சேதப்படுத்தினர். பிறகு, உடனே, கடையை மூட வேண்டும். இல்லாவிட்டால் ஒழித்து விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து தக்கோலம் காவல் நிலையத்தில் முத்துராமலிங்கம் மீண்டும் புகார் அளித்தார். ஆனால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார கடை வியாபாரியை சமாதானம் செய்து அனுப்பியதாக தெரிகிறது. மீண்டும் கடையை திறந்தால் கஞ்சா வியாபாரிகள் வந்து தகராறு செய்வார்களே என பயந்த முத்துராமலிங்கம் நேராக கடைக்கு சென்று கடையை இழுத்து மூடினார்.
பிறகு, கடை ஷெட்டர் மீது நோட்டீஸ் ஒன்றை ஒட்டினார். அதில், கஞ்சா போதையில் உலா வரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது. இப்படிக்கு சுபம் டிரேடர்ஸ் நிர்வாகம்’’ என எழுதினார்.
பிறகு, தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முத்துராமலிங்கத்துக்கு ஆதரவாக தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், முத்துராமலிங்கம் பழையபடி கடையை திறந்து வியாபாரி செய்யுமாறு அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் போலீஸார் அளித்த வாக்குறுதியை ஏற்று முத்துராமலிங்கம் மீண்டும் கடையை திறந்தார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க அவர்களை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் அவர்கள் பதிலளிக்கவில்லை.