

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வீட் டில் ரகசிய அறைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 125 எரிசாராய கேன் களை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த கலஸ்தம்பாடி கிராமத்தில் வசிப்பவர் பாண்டுரங்கன் மகன் மோகன்தாஸ்(32). இவரது வீட்டில் எரிசாராயம் நிரப்பப்பட்ட கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் நேற்று முன் தினம் மாலை சோதனை நடத்தினர், பூஜை அறையில் உள்ள சுவாமி படத்துக்கு பின்னால் ஒரு ரகசிய அறையிலும், குளியலறை அருகே மற்றொரு ரகசிய அறைகளில் எரிசாராய கேன்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டு ரகசிய அறைகளில் இருந்து கேன்களை வெளியே எடுத்து வந்தனர். அப்போது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 125 கேன்களில் 4,375 லிட்டர் எரிசாராயம் இருந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும். சினிமா பட பாணியில், எரிசாராயத்தை பதுக்கி வைப்பதற்காகவே, வீட்டில் ரகசிய அறைகள் கட்டப்பட்டுள்ளன.
வெளிமாநிலங்களில் இருந்து எரிசாராய கேன்களை கடத்தி வந்து, வீட்டில் உள்ள ரகசிய அறைகளில் மோகன்தாஸ் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளார்.
மேலும், பிளாஸ்டிக் கவரில் சாராயத்தை நிரப்பி, பாக்கெட் சாராய விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். திருவண்ணாமலை மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மோகன்தாஸை கைது செய்தனர். மேலும், 125 எரிசாராய கேன்கள் மற்றும் 150 பாக்கெட் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணா மலை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கார்த்திகேயன் நேற்று திரு வண்ணாமலை மதுவிலக்கு அமல் பிரிவுக்கு சென்று, பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராய கேன்களை பார்வையிட்டு, மோகன்தாஸிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர் கூறும்போது, “மோகன்தாஸ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2 ரகசிய அறைகளில் இருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 125 எரிசாராய கேன்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. யார்? யாருக்கு சாராயம் விற் பனை செய்யப்படுகிறது என விசாரணை நடத்தப்படுகிறது. தொடர்புள்ள அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
இந்தாண்டு, இதுவரை 7 சாராய வியாபாரிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் முக்கிய நபர் உட்பட 2 பேரை தேடி வருகிறோம்” என்றார்.