

திருச்சி: லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற கல்வித் துறை அலுவலர்கள் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம் விமானநிலையம் அருகே உள்ள குண்டூரைச் சேர்ந்தவர் ஞானசெல்வி. இவர், கடந்த 2002-ம் ஆண்டு பெல்கைலாசபுரத்தில் உள்ள தமிழ் பயிற்றுமொழி நடுநிலைப் பள்ளியில் உதவி இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்தார்.
பணி நியமனத்தின்போது ஞானசெல்வியிடமிருந்து ரூ.7 ஆயிரம்லஞ்சம் பெற்றதாக அப்போதைய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வள்ளியப்பன், நேர்முக உதவியாளர் கவுரி, கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், உதவி கண்காணிப்பாளர் வரதராஜன் ஆகியோரை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 5.8.2002-ல் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இவ்வழக்கு குறித்த விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, நேர்முக உதவியாளர் கவுரி, கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.
தொடர்ந்து மற்ற இருவர் மீதும் நடைபெற்ற விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதிகார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், வள்ளியப்பன்(71), வரதராஜன்(62) ஆகியோர் லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்ததுடன், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.