தி.மலை | 4 இடங்களில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் 6-வது நபர் கைது: கர்நாடக எல்லையில் கன்டெய்னர் லாரி பறிமுதல்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கன்டெய்னர் லாரியுடன் 6-வது நபரான சிராஜுதீனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கன்டெய்னர் லாரியுடன் 6-வது நபரான சிராஜுதீனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Updated on
1 min read

தி.மலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6-வது நபரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த பிப்.12-ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

ஹரியாணா மாநிலம் மேவாத் கும்பல், காஸ் வெல்டிங் மூலம் இயந்திரங்களை வெட்டி எடுத்து கைவரிசையை காட்டியது. கொள்ளையர்களை பிடிக்க டிஐஜி முத்துசாமி தலைமையில் 9 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இதில், ஏடிஎம் கொள்ளை திட்டத்துக்கு தலைமை வகித்த ஹரியாணா மாநிலம் மேவாத் பகுதியில் வசிக்கும் முகமது ஆரிப்(35), ஆசாத்(36), கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள விடுதியில் தங்குவதற்கு உதவியதாக அசாம் மாநிலம் லாலாப்பூர் பகுதியில் வசிக்கும் அப்சர் ஹுசேன்(26), பணம் பறிமாற்றம் செய்ய உதவியதாக கர்நாடக மாநிலம் கோலார் மகாலட்சுமி லே அவுட் பகுதியில் வசிக்கும் குத்ரத் பாஷா(43) மற்றும் மூளையாக செயல்பட்ட கர்நாடக மாநிலம் கோலார் நயமத் பீ நகரில் வசிக்கும் நிஜாமுதீன்(37) ஆகியோரை தனிப்படை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், திஜாரா வட்டம், ஜவாந்தி குர்த் கிராமத்தைச் சேர்ந்த சிராஜுதீன்(50) என்பரை கர்நாடக மாநில எல்லையில் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, கோலார் பகுதிக்கு காரில் கொண்டு சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து ஹரியாணா மாநிலத்துக்கு கன்டெய்னர் லாரியில் அந்த பணத்தை சிராஜுதீன் கொண்டு சென்றதாகவும் தெரிகிறது.

பணத்தை மீட்க நடவடிக்கை: ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6 முக்கிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸார் இதுவரை ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். மீதமுள்ள ரூ.68 லட்சத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in