Published : 15 Mar 2023 07:40 AM
Last Updated : 15 Mar 2023 07:40 AM

உதகை | வீட்டு வரிக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

உதகை: வீட்டு வரிக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதகை நகராட்சி வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த காந்தல் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ் பாட்ஷா. இவர், 2009-ம் ஆண்டு வீட்டு வரியை பெயர் மாற்றம் செய்ய, உதகை நகராட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாக பெயர் மாற்றம் செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் நகராட்சி அலுவலகம் சென்றபோது, வருவாய் உதவியாளராக பணிபுரிந்த பி.பாக்கியராஜ் என்பவர் ரூ.3,000 அளித்தால் பெயர் மாற்றம் செய்து, தனி வீட்டு வரி ரசீது தருவதாக கூறியுள்ளார். ஆனால், பணம் கொடுக்க விரும்பாத மும்தாஜ் பாட்ஷா, உதகை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: இதையடுத்து, 9.2.2009 அன்று லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பெரோஸ்கான், ஆய்வாளர் ஜெரால்ட் அலெக்சாண்டர் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை, பாக்கியராஜிடம் மும்தாஜ் பாட்ஷா அளித்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், பாக்யராஜை பிடித்து, ரசாயனம் தடவிய பணத்தை பறிமுதல் செய்தனர்.

உதகை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாக்யராஜுக்கு லஞ்சம் கேட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், லஞ்ச பணம் பெற்ற வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, பாக்கியராஜ் கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ரேணுகா கார்த்திகேயன் ஆஜரானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x