

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நாலுவேதபதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சத்தியவான், கோவில்பத்து உதவி வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர், 2018 நவ.16-ல் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்கியதாக போலி பட்டியல் தயார் செய்து, பண மோசடி செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு நாலுவேதபதியைச் சேர்ந்த அட்சயகுமார் என்பவர் புகார் அனுப்பி இருந்தார். இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், சத்தியவான், ரவிச்சந்திரன் ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்கியதாக போலி பட்டியல் தயார் செய்து ரூ.2.75 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் சத்தியவான் தற்போது வேதாரண்யம் வட்டம் தலைஞாயிறு மூன்றாம் சேத்தி கிராமத்திலும், வேளாண் உதவி அலுவலர் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டாரம் நீர்முளை கிராமத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.