

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பெரியகவுண்டனூர் பகுதியில் மர்மமான முறையில் காகங்கள் இறந்து வந்தன. இந்நிலையில், அதேபகுதியில் நாகராஜ் என்பவரின் தோட்டம் அருகே ஒருவர் இறந்த காகங்களை சாக்கு பைக்குள் போட்டுக் கொண்டிருப்பதை, நாகராஜ் பார்த்துள்ளார்.
அவரிடம் விசாரிக்க முற்பட்டபோது, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார். அருகே இருந்த விவசாயிகள் அவரை துரத்தி பிடித்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில், அவரிடம் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "காகங்களை கொன்றவர் சிஞ்சுவாடி கிராமத்தை சேர்ந்த சூர்யா (37) என்பதும், சர்க்கஸில் வேலை பார்த்து வந்த இவர், குஜராத்தில் இருந்து வந்து சிஞ்சுவாடியில் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும், வெண்படை நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிப்பதற்காக, விஷம் வைத்து காகங்களை கொன்றுள்ளார்" என்றனர்.