சென்னை ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை: போலீஸார் விசாரணை

சென்னை ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை: போலீஸார் விசாரணை
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த வைப்பு புஷ்பக் சாய் (21), சென்னை ஐஐடியில் பி.டெக் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். ஐஐடியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். வகுப்புக்கு செல்லாமல் அறையிலேயே இருந்த சாய், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், ஐஐடி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கோட்டூர்புரம் போலீஸார், சாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘மாணவர் சாயின் தந்தை ஆந்திராவில் பேருந்து நடத்துநராக பணியாற்றுகிறார். சாய் கடந்த 3 நாட்களாக வகுப்பறைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்துள்ளார். பாடத்தை படிப்பதில் சிரமம் உள்ளதாக நண்பர்களிடம் தெரிவித்து கவலையாக இருந்துள்ளார். அவரது முடிவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

இதனிடையே, சென்னை ஐஐடி நிர்வாகம் நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கையில், ‘கரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய காலக்கட்டம் ஐஐடிக்கு ஒரு சவாலான சூழலாக இருந்து வருகிறது. ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு நிர்வாகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இத்தகைய சம்பவங்கள் குறித்து விசாரிக்க மாணவர் பிரதிநிதிகள் உட்பட நிலையான விசாரணைக் குழுவும் சமீபத்தில் அமைக்கப்பட்டது. மாணவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in