

சென்னை: தொழில் அதிபர் வீட்டில் 33பவுன் நகை, 57 கிலோ வெள்ளிதிருடப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் திருட்டு பைக்கில் வந்தபோது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார்.
சென்னை, வடபழனி, குமரன் காலனி, 2-வது தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சந்தோஷ்குமார் (65). தனியார் போட்டோ லேப் உரிமையாளரான இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 33 பவுன் நகைகள், 57 கிலோவெள்ளிப் பொருட்கள், ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சந்தோஷ்குமார் புகார் அளித்தார். அதன்படி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
நகை, பணத்தைத் திருடியவர் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் `ஹார்ட் டிஸ்க்'கையும் திருடிச் சென்றுவிட்டார்.
மேலும் திருடியவர் இருளில் மறைந்ததால் சம்பவ இடத்தை சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களிலும் அவரது உருவம் தெளிவாகப் பதிவாகவில்லை. இதனால், குற்றவாளியை அடையாளம் காண முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் விருகம்பாக்கம், நடேசன் நகர், 2-வது தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார்.
எனவே, அவரிடம் போலீஸ் பாணியில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் அம்பத்தூர், அயப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவைச்சேர்ந்த முத்து (32) என்பதும், பைக்கை வானகரம் பகுதியில் திருடிவிட்டுத் தப்பி வந்தது தெரியவந்தது. மேலும் இவர்தான் சந்தோஷ்குமார் வீட்டில் தங்க நகைகள், வெள்ளிக் கட்டிகள் மற்றும் ரொக்கப் பணத்தைத் திருடியவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து முத்துவை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 37 பவுன் நகைகள், 41.5 கிலோ வெள்ளி, ரொக்கம் 62 ஆயிரம், ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து ஏற்கெனவே 3 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்ததாக போலீஸார் கூறினர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.