

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே ரூ.5 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திய 3 பேரை போலீஸார் காரில் துரத்திச் சென்று கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அதிசயம் (68). இவர் கோழிப்பண்ணை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை நடைப்பயிற்சி சென்று திரும்பியபோது காரில் வந்த 3 பேர் கும்பலால் கடத்தப்பட்டார்.
இதுகுறித்து காவல் கண் காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் தேனி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி நோக்கி வந்த ஒரு காரை போலீஸார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. உடனே, ஆண்டி பட்டி சார்பு- ஆய்வாளர் சுல்தான் பாட்சா தலைமை யிலான போலீஸார் காரை விரட்டிச் சென்றனர். போலீஸார் துரத்திய தால், வடுகபட்டி குவாரி பிரிவில் தொழிலதிபர் அதிசயத்தை காரிலிருந்து தள்ளிவிட்டுச் சென்றனர்.
ஆனாலும் போலீஸார் காரை தொடர்ந்து விரட்டிச் சென்று, கடத்தலில் ஈடுபட்ட மதுரை திருநகரைச் சேர்ந்த பிரபு (31), அஜித் (26), கவுசிக் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். துரிதமாகச் செயல்பட்ட போலீஸாரை எஸ்பி பாராட்டினார்.