

ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தனியார் நிலத்தில் அனுமதி இன்றி மண் அள்ளிய டிப்பர் லாரி, டிராக்டர், பொக்லைன் என 11 வாகனங்களை பறிமுதல் செய்து 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பந்தப்பாறை செல்லும் வழியில், தனியார் நிலத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரி நாதனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆய்வாளர் கீதா, சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முறம்பு பீட் பகுதிக்கு உட்பட்ட பாண்டியன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உரிய அனுமதி இன்றி சுமார் 10 அடி ஆழத்துக்கு மேல் மண் அள்ளப்பட்டு வாகனங்களில் செங்கல் சூளைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் மற்றும் மண் அள்ளபயன்படுத்திய பொக்லைன் இயந் திரங்கள் உட்பட 11 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வாகன ஓட்டுநர்களான ராஜபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(35), வத்திராயிருப்பை சேர்ந்த ராமசாமி(34), மகேஸ் வரன்(23), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முனியாண்டி(41), கார்த்திக் (25), கண்ணன் (27), பூலார் (47), வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த ராஜேஸ்(30), கான்சாபுரத்தை சேர்ந்த முத்து ராஜ்(37), புதுப்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார்(33) ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.