Published : 14 Mar 2023 06:03 AM
Last Updated : 14 Mar 2023 06:03 AM

வேலூர் நகை பறிப்பு வழக்கில் 3 இளைஞர்கள் கைது: 6 மாவட்டங்களில் விரட்டி சென்று பிடித்துள்ளனர்

வேலூர்: வேலூரில் பட்டப்பகலில் 15 பவுன் நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 3 பேரை 6 மாவட்டங்களில் விரட்டிச் சென்று தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த லோகேஷ் குமார் (30) என்பவர் கடந்த 7-ம் தேதி வேலப்பாடியில் உள்ள ஒரு வங்கி கிளையில் 15 பவுன் தங்க நகைகளை அடமானம் வைக்க சென்றார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், லோகேஷ் குமார் வைத்திருந்த நகை பையை பறித்துக்கொண்டு தப்பினர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் தப்பிய மர்ம நபர்கள் ஆட்டோ மீது மோதி கீழே விழுந்தனர். சுதாரித்து எழுந்தவர்கள் தங்களது வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பினர்.

இது தொடர்பாக தெற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷியாமளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், மர்ம நபர்கள் விட்டுச்சென்ற இரு சக்கர வாகனம் போலியானது என்பதுடன், அது காரின் பதிவெண் என தெரியவந்தது. தொடர் விசாரணையில், நகை பறிப்பு வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய சேலம் மற்றும் திருச்சிக்கு தனிப் படையினர் விரைந்தனர்.

இந்த வழக்கில் பெரம்பலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (37), சேலத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (23), திருச்சியைச் சேர்ந்த ராஜசேகர் (23) ஆகியோரை ஷியாமளா தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சுமார் ஐந்தரை பவுன் தங்க நகையை மீட்டனர். கைதான நபர்களிடம் நடத்திய விசாரணையில், நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய 4 பேரும் சிறையில் பழக்கமானவர்கள்.

இவர்கள் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணத்தை பறிக்கும் கும்பலமாக செயல்பட தொடங்கியுள்ளனர். இவர்கள் 4 பேரும் நகை, பணம் பறிப்பதற்காக பெங்களூரு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக வேலூரில் ராஜசேகரை தவிர்த்து மூன்று பேரும் சந்தித்த நிலையில் சென்னையில் இருந்து ராஜசேகர் வருவதற்கு தாமதமாகியுள்ளது. அவர் வந்த பிறகு வேலூரிலும் நகை அல்லது பணத்தை பறித்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, லோகேஷ்குமாரை பின்தொடர்ந்து 15 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

தற்போது கைதான மூன்று பேரையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், பெரம்பலூர், வேளாங்கண்ணி, திருச்சி, சேலம் என விரட்டிச் சென்று தனிப்படையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x