

காரைக்குடி: காரைக்குடியில் போலீஸார்போல நடித்து, நகை முகவரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல், அவரிடமிருந்து ஒன்றரை கிலோ தங்கம், ரூ.2.50 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(49). இவர் சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களில் நகைகளை வாங்கி வந்து காரைக்குடியில் உள்ள நகை வியாபாரிகளிடம் வழங்கி பணம் வசூலித்துக் கொடுக்கும் முகவராக இருந்து வருகிறார்.
ஆம்னி பேருந்தில் பயணம்: சென்னையில் இருந்து ஒன்றரை கிலோ நகைகள், ரூ.2.50 கோடி பணத்துடன் தனியார் ஆம்னி பேருந்தில் வந்த அவர், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு காரைக்குடி கழனிவாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் அங்கு நின்ற ஆட்டோவில் ஏற முயன்றார்.
காரில் வந்து கடத்தல்: அப்போது காரில் வேகமாக வந்த ஒரு மர்ம கும்பல், தாங்கள் போலீஸார் என மிரட்டும் வகையில் `விசாரணை நடத்த வேண்டும்' என ரவிச்சந்திரனை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ தங்கம், ரூ.2.50 கோடி பணத்தை பறித்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டம், லேனா விலக்கு சுங்கச்சாவடி அருகே ரவிச்சந்திரனை கீழே இறக்கிவிட்ட அந்த கும்பல் பின்னர் காரில் தப்பியுள்ளது. நடந்த சம்பவத்தை ரவிச்சந்திரன் நகை வியாபாரிகளிடம் செல்போனில் தெரிவித்தார்.
நகை வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காரைக்குடி உதவி எஸ்.பி. ஸ்டாலின் தலைமையிலான போலீஸார் கழனிவாசல் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைதேடி வருகின்றனர்.