

சென்னை: குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டோர் என 947 பேரின் வீடு தேடிச் சென்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் கொலை,கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல் உட்பட அனைத்துவகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல்ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக ரவுடிகளுக்கு எதிரான ஒருநாள் சிறப்புத் தணிக்கை நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
இதில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரவுடிகள், 2-க்கும்மேற்பட்ட அடிதடி, தகராறு வழக்குகளில் சிக்கியோர், பணம் கேட்டுமிரட்டல் வழக்கில் தொடர்புடையவர், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதியப்பட்டோர், குற்ற வழக்குகளில் சிக்கி ஜாமீனில் வெளியில் இருப்போர், திருந்தி வாழப்போவதாக நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தோர் என 947 பேரின் வீடு தேடிச் சென்று போலீஸார் எச்சரித்தனர்.
மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ, பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் ஓர் ஆண்டு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், ``சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.