

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், முகப்பேர் வட்டவடிவ நகர் டிவிஎஸ் அவென்யூ சந்திப்பு அருகே போலீஸார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவரது பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவர், அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த மணி ரத்னம் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த சாலி கிராமத்தைச் சேர்ந்த ரசாக் (33), கொருக்குப் பேட்டை ஆர்.கே.நகரில் கஞ்சா விற்பனை செய்த வேலு (36), ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்த அரவிந்தன் (23) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3.7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னையில் ஒரே நாளில் 8.7 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.