Published : 12 Mar 2023 04:23 AM
Last Updated : 12 Mar 2023 04:23 AM
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள நொச்சியத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி ராணி(30). இவர் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தைப் பார்த்து கடன் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார்.
பின்னர், அதில் அவர்கள் கேட்டவாறு புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்களை அளித்து, அந்தச் செயலியின் வழியாக அவ்வப்போது சிறிய தொகையைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். இந்தநிலையில், பணம் பெறுவதற்காக கடன் செயலிகளில் அவர் பதிவேற்றம் செய்திருந்த சில புகைப்படங்களை, மார்பிங் செய்து, அவற்றை வெவ்வேறு வாட்ஸ் அப் எண்களிலிருந்து ராணிக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், இந்தப் படங்களை வெளியிடாமல் இருக்க பணம் அனுப்ப வேண்டும் எனக் கூறி ராணியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன ராணி, பலரிடம் கடன் பெற்று ரூ.1.70 லட்சம் வரை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அதன்பிறகும் அவர்கள் மிரட்டல் தொடர்ந்தது. இதுகுறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் ராணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT