

திருச்சி: குடும்ப நல நீதிமன்றத்தால் 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சிறையிலிருந்து விடுதலையாகும் நாளில் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதேபோல வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மற்றொரு கைதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்(75). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவருக்கு, குடும்ப பிரச்சினை தொடர்பான ஒரு வழக்கில் 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் குடும்ப நல நீதிமன்றம் கடந்த பிப்.25-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து தஞ்சாவூர் போலீஸார் சுப்ரமணியனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தண்டனை காலம் முடிவுற்று நேற்று முன்தினம் அவர் விடுதலை செய்யப்பட இருந்தார். இதற்காக, சிறையில் நிர்வாக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி இரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதேபோல, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் என்ற ஸ்டீபன் (40). திருட்டு வழக்கில் தண்டனை பெற்று, கடந்த மே மாதத்திலிருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 6-ம் தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக சிறை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.