

தஞ்சாவூர்: பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த நபரை கோவையில் காவல் துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம் வட்டம், முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆப்பிள் சதீஷ் (32). இவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வழிப்பறி, பெண்களிடம் சங்கிலிப் பறிப்பு, பூட்டியிருக்கும் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவர் மீது திருநீலக்குடி, திருவிடைமருதூர், நாச்சியார்கோவில், குடவாசல் காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக அவர், போலீஸாரிடம் சிக்காமல் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், ஆப்பிள் சதீஷ் கோவையில் இருப்பதாக திருவிடைமருதூர் உட்கோட்ட குற்றப் பிரிவு தனிப்படை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, குற்றப் பிரிவு போலீஸார், அங்கு சென்று சதீஷை கைது செய்து திருவிடைமருதூர் அழைத்து வந்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.