பெரம்பலூர் | சிசிடிவிக்கு கருப்பு பெயின்ட் பூசி வீட்டில் நகை, பணம் திருட்டு: சத்தம் கேட்காமல் இருக்க பட்டாசு வெடித்தனர்

பெரம்பலூர் | சிசிடிவிக்கு கருப்பு பெயின்ட் பூசி வீட்டில் நகை, பணம் திருட்டு: சத்தம் கேட்காமல் இருக்க பட்டாசு வெடித்தனர்
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை அம்மன் நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மனைவி ரமா பிரபா(40). ஞானசேகரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், ரமா பிரபா தனது 2 பெண் குழந்தைகளுடன் லால்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில், ரமா பிரபாவின் வீட்டின் கதவு நேற்று திறந்து கிடந்ததைக் கண்டு, அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ரமா பிரபா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.

திருட்டில் ஈடுபட்டவர்கள், வீட்டின் முன்புறம் உள்ள 3 கண்காணிப்பு கேமராக்கள் மீது கருப்பு பெயின்ட் பூசியதுடன், கதவை உடைக்கும் சத்தம், அக்கம்பக்கத்தினருக்கு கேட்காமல் இருக்க, தெருவில் பட்டாசுகளை வெடித்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்றொரு சம்பவம்: இதேபோன்று, பெரம்பலூர் எளம்பலூர் சாலை தங்கம் நகரைச் சேர்ந்தவர் முத்தையா(63). இவர் மனைவி அடைக்கம்மையுடன் கடந்த பிப்.24 அன்று காசிக்கு புனித யாத்திரை சென்றுள்ளார். இவரது வீட்டில் வேலை செய்துவரும் பெண் நேற்று மாலை செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்துகிடந்தன.

தகவலறிந்து போலீஸார் வந்து ஆய்வு செய்ததில், வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கருப்பு பெயின்ட் பூசப்பட்டிருந்ததுடன், கேமரா காட்சிகளைப் பதிவு செய்யும் டிவிஆர் சாதனத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர் வந்த பிறகே திருடு போனவற்றின் விவரம் தெரியவரும் என பெரம்பலூர் போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in