உதகை | அதிக சத்து மாத்திரை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழப்பு: தலைமை ஆசிரியர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்

உதகை | அதிக சத்து மாத்திரை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழப்பு: தலைமை ஆசிரியர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு மூலம் இரும்பு சத்து மற்றும் போலிக் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி பள்ளி சென்றபோது, குழந்தைகளிடம் சத்து மாத்திரை அதிகளவில் கிடைத்துள்ளது. அப்போது யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி ஏற்பட்டு, சாக்லேட் சாப்பிடுவது போல தொடர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் 2 மாணவர் மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை உதகை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மாணவிகள் 4 பேரும் 30 முதல் 60 மாத்திரைகள் வரை சாப்பிட்டதாக கூறப்பட்டது. அவர்களது உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

உதகையை சேர்ந்த சலீம் என்பவரது மகள் ஜெய்னபா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உதகை மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி கூறும்போது, “குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை மதியம் சாப்பிட்டபின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்று தெரியவில்லை” என்றார்.

இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை விநியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in