

சென்னை: சென்னையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக்ரேஸ் என்ற பெயரில் சாகசத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்யுமாறு மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அண்ணா சாலை, மெரினா காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ஜிஎஸ்டி சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபடுவோரைப் போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை அண்ணாசாலை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீஸார் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கொருக்குப்பேட்டை ராகுல் (22), அஜய்(18), லோகேஷ் (20), பழைய வண்ணாரப் பேட்டை கிருஷ்ண வம்சி(19) ஆகியோரைக் கைது செய்து, பைக் ரேஸுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.