

குவாஹாட்டி: பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு சிம் கார்டுகள் சப்ளை செய்ததாக அசாமின் 2 மாவட்டங்களில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பல்வேறு மொபைல் போன்கள், சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தின் நாகோன், மோரிகாவோன் மாவட்டங்களில் சுமார் 10 பேர் முறைகேடான வழியில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளை
வாங்கி, அவற்றை பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு விற்பனை செய்வதாகவும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக அவர்கள் செயல்படுவதாகவும் உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அசாம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட நடவடிக்கையில் நாகோன், மோரிகாவோன் மாவட்டங்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நாகோன் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிகுல் இஸ்லாம், போடோர் உதீன், மிஜானுர் ரஹ்மான், வஹிதுஸ் ஜமான் மற்றும் மோரிகாவோன் மாவட்டத்தை சேர்ந்த பஹருல் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டனர்.
இவர்கள் 5 பேர் மற்றும் தலைமறைவாக இருக்கும் 5 பேரின் வீடுகளில் இருந்து 18 மொபைல் போன்கள், 136 சிம் கார்டுகள், விரல்ரேகை ஸ்கேனர், உயர் தொழில்நுட்ப கணினி சிபியு, வெளிநாட்டு தூதரகம் ஒன்றுடன் ராணுவத் தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கான சாதனம் மற்றும் பிறப்பு சான்றிதழ்கள், வங்கிக்கணக்கு புத்தகங்கள், புகைப்படங்கள் போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், அஷிகுல் இஸ்லாம் இரண்டு ஐஎம்இஐ எண்கள் கொண்ட மொபைல் போனில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் ராணுவத் தகவல்களை வெளிநாட்டுத் தூதரகத்துடன் பகிர்ந்துகொண்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து குறிப்பிட்ட மொபைல் போனும் கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட மற்ற நபர்களும் தொழில்நுட்ப ரீதியாக இதில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உளவுத் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து போலீஸார் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.