

அகமதாபாத்: கடத்தப்பட்ட ரூ.425 கோடி மதிப்புள்ள ஹெராயினை இந்திய கடலோர காவல்படையினரும், குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இந்தியக் கடலோர காவல்படை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: குஜராத்தின் ஓகா கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் காலை கடலோரக் காவல் படை கப்பல் மீரா பெஹன் ரோந்து சுற்றி வந்தது. அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு வெளிநாட்டுப் படகு சென்று கொண்டிருந்தது.
ஈரானைச் சேர்ந்த அந்த படகிலிருந்து 61 கிலோ எடையில் ரூ.425 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. படகிலிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 18 மாதங்களில் குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினருடன் இணைந்து வெளிநாட்டுக் கப்பல்களை சோதனையிட்டதில் 407 கிலோ எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.2,355 கோடியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.