

அகமதாபாத்: சிம் பாக்ஸ் எனப்படும் புதிய கருவியின் மூலம் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றுவது மட்டுமின்றி அதனை பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் நடைபெறுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சிம் பாக்ஸ்கள் நமது சட்ட அமலாக்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை தொலைத்தொடர்புத் துறை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த சிம் பாக்ஸை பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதை அந்நகர போலீஸார் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2020 செப்டம்பரில் சபர்மதி ஆற்றங்கரையில் இரண்டு இளைஞர்கள் தங்களது ஸ்கூட்டர்களில் சிம் பாக்ஸ்களை பொருத்தி முறையான இணைய இணைப்பு வசதி பெறாமல் மோசடி அழைப்புகளை மேற்கொண்டனர்.
ஜிஎஸ்எம் அழைப்பாக மாற்றம்: ஒவ்வொரு சிம் பாக்ஸும் 20 முதல் 500 சிம் கார்டுகளை செலுத்துவதற்கான ஸ்லாட் வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றை குரல் வழியான இன்டர்நெட் புரோட்டோகால் (விஓஐபி) கேட்வே மூலமாக இயக்குவதன் மூலம் சர்வதேச “விஓஐபி” அழைப்புகளை உள்ளூர் “ஜிஎஸ்எம்” அழைப்புகளாக மாற்றமுடியும். இதன் மூலம், மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களால் விதிக்கப்படும் சர்வதேச கட்டணங்களை தவிர்க்க இதுபோன்ற மோசடி நடைபெறுகிறது.
போலியான எஸ்எம்எஸ், லிங்க்,வாய்ஸ் கால் ஆகிய மூன்று வழிகளில் மோசடியாளர் வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு நிதி மோசடியில் ஈடுபடவும், ஆயிரக்கணக்கான எஸ்எம்எஸ்களை ஒரே நேரத்தில் அனுப்பவும் இந்த சிம் பாக்ஸ் உதவியாக உள்ளது.
சிம் பாக்ஸ்கள் வழியாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சர்வதேச அழைப்புகள் வருவதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளும் சர்வதேச மொபல் சாதன அடையாள எண்களை தற்காலிக எண்களாக மாற்றிக் கொண்டு விடுகின்றனர்.
வாடிக்கையாளரின் புகாரின் அடிப்படையில், மொபைல் டவரை வைத்தே சட்டவிரோதமாக இயங்கும் இதுபோன்ற தொலைபேசி அலுவலகங்களில் சோதனை நடத்த முடியும் என்கின்றனர் காவல் துறை அதிகாரிகள்.