

சென்னை: வீட்டில் பதுங்கி வைத்து, பீடா கடையில் விற்பனை செய்யப்பட்டு வந்த 38 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகரில் போதைப் பொருட்கள் கடத்துதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கலைத் தடுக்கபோலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகப் போதை தடுப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சாதாரண உடையில் கண்காணிப்பு: இந்நிலையில் அண்ணாசாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெங்கடேசன் 2-வது தெரு பகுதியில் ஒருவர் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்து வருவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அண்ணா சாலை தனிப்படை போலீஸார் சாதாரண உடையில் அங்கு கண்காணித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் வீடு ஒன்றில் சோதனை மேற்கொண்டபோது அங்கு 38.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக பிஹார் மாநிலம், கட்டோரியா பகுதியைச் சேர்ந்த கஸ்ரத்தூரி (28) என்பவரைக் கைது செய்தனர்.
தனிப்படை தேடுதல் வேட்டை: விசாரணையில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவர் அண்ணா சாலையில் பீடா கடை நடத்தி வருவதும், கஸ்ரத்தூரி தங்கி இருந்த வீட்டில் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பாக்கெட்டுகளை அவர் பெருமளவில் பதுக்கி வைத்து, பீடா கடையில் வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள சிக்கந்தரை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.