Published : 08 Mar 2023 07:04 AM
Last Updated : 08 Mar 2023 07:04 AM
கடலூர்: கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சுவாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றத்தை தணிக்க இரு கிராமங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
புவனகிரி அருகே சாத்தப்பாடியைச் சேர்ந்தவர்கள் புதுப்பேட்டை கடலில் சுவாமி தீர்த்தவாரி முடிந்து, நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் சுவாமியை ஊருக்கு திரும்ப எடுத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த ஊர்வலத்தில் சில இளைஞர்கள் பாடல் இசைத்தபடி நடனமாடி சென்றதை, மேலமணக்குடி பிள்ளையார் கோயில் அருகில் கலியன் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த கலியன், சுபாஷ், ராக்கி என்கிற குமரேசன், ஞானபிரகாசம் ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் சுவாமி ஊர்வலத்தில் சென்ற ரகுநாத் (20), நவீன்குமார் (17), சுரேந்தர் (16), நித்திஷ் (17), அன்புச்செழியன் (16) ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்களை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றிச் சென்றபோது வாகனத்தை நிறுத்தி கலியன் மற்றும் அவர் மகன் அஜய் ஆகிய இருவரும் சேர்ந்து ஆம்புலன்ஸில் இருந்தவர்களை திட்டி, கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து கூச்சலிட்ட அப்பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி மற்றும் ஜெயந்தி ஆகியோரையும் தாக்கினர்.
இதில் காயமடைந்த இரு தரப்பைச் சேர்ந்த 8 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்றிரவு இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
இதில்,மேல மணக்குடியைச் சேர்ந்த சஞ்சய் (22), தயாநிதிராஜ்(18), அபிமணி (18), சந்துரு(20), சுபாஷ்(23), ராக்கி (எ)குமரேசன் (26) உள்ளிட்ட 6 பேர் மீது எஸ்சி எஸ்டி சட்டப்பிரிவு உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தப்பாடியை சேர்ந்த சிவலிங்கம் (எ) ராஜசேகர் (35) மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இரு கிராமங்களில் வேறு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நேற்று முன் தினம் நள்ளரவில் இருந்து போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதரப்பினரையும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசகி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.வாஞ்சிநாதன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT