

வேலூர்: வேலூரில் பட்டப்பகலில் நெரிசல் மிகுந்த வேலப்பாடி சாலையில் 15 பவுன் நகை பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் (30). இவர், வேலப்பாடியில் உள்ள ஒரு வங்கி கிளையில் 15 பவுன் தங்க நகைகளை அடமானம் வைக்க நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்றுள்ளார்.
பின்னர் வேறு காரணத்துக்காக வங்கியில் இருந்து வெளியே வந்து தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட தயாரானார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லோகேஷின் கையில் இருந்த நகை பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை பறிகொடுத்த லோகேஷ் கூச்சலிடவே மர்ம நபர்களை பொதுமக்கள் சிலர் விரட்டியுள்ளனர். வேலப்பாடி சாலை எப்போதும் நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் மர்ம நபர்கள் தப்பியபோது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர்.
இதையடுத்து, இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் நகைப்பையுடன் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு ஓடினர். அவர்கள், அருகில் உள்ள கானாறு தெரு வழியாக தப்பினர்.
இதையடுத்து, மர்ம நபர்கள் விட்டுச் சென்ற வாகனத்தை பொதுமக்கள் பறிமுதல் செய்து தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தெற்கு காவல் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், ஷியாமளா (குற்றப்பிரிவு) ஆகியோர் விரைந்து சென்று இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் பதிவெண் போலி என்றும், அது காரின் பதிவெண் என தெரியவந்தது.
இதையடுத்து, தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை பறிகொடுத்த லோகேஷ் கூச்சலிடவே மர்ம நபர்களை பொதுமக்கள் சிலர் விரட்டியுள்ளனர்.