

திருச்சி: திருச்சியில் இருந்து சென்ற ரயிலில் டிக்கெட் பரிசோதகரைத் தாக்கியதாக சென்னை தலைமைச் செயலக ஊழியரை திருச்சி ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் குமார்(35). இவர், திருச்சி ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சேது அதிவிரைவு ரயிலில் அரவிந்த்குமார் பணியில் இருந்தார். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டு, நேற்று அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டது.
அப்போது, ரயிலில் பயணம் செய்த ராமேசுவரத்தைச் சேர்ந்தவரும், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவருமான கிருஷ்ணமூர்த்தி(45), தனது இருக்கையில் உட்காராமல், டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமாரின் இருக்கையில் உட்கார்ந்துள்ளார். இதுதொடர்பாக, அரவிந்த் குமாருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அரவிந்த் குமாரை கிருஷ்ணமூர்த்தி தாக்கியுள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ஆர்பிஎப் போலீஸாரிடம் அரவிந்த் குமார் புகார் தெரிவித்தார். இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியை ஆர்பிஎப் போலீஸார் பிடித்து, திருச்சிக்கு அழைத்து வந்து ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அரவிந்த் குமார் அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணமூர்த்தி மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, டிக்கெட் பரிசோதகரை தாக்கிய அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்ஆர்எம்யு துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிடிஆர் மீது நடவடிக்கை: இதற்கிடையே, ரயிலில் சென்றபோது, தான் பிஹாரைச் சேர்ந்தவர் என்பதால், தன்னை கிருஷ்ணமூர்த்தி தாக்கியதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் டிக்கெட் பரிசோதகர் அரவிந்த் குமார் கூறியுள்ளார்.
பிரச்சினையை திசை திருப்பும் வகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அரவிந்த் குமார் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ்அகர்வால் தெரிவித்துள்ளார்.