

திருப்பூர்: அவிநாசி அருகே கார் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவிநாசியை அடுத்த சூளையை சேர்ந்தவர் சிவலிங்கம் (60). வாடகை கார் வைத்து தொழில் செய்கிறார்.
கடந்த 26-ம் தேதி பெருமாநல்லூர் அருகே மதுபானக் கடையில் மது அருந்த சென்றுள்ளார். அவரிடம் 4 இளைஞர்கள் பேச்சு கொடுத்தனர். பின்னர், உதகை செல்லலாம் என வாடகை காரில் புறப்பட்டனர்.
இந்நிலையில், செல்லும் வழியில் காரை ஓரிடத்தில் நிறுத்தி உணவு வாங்க சிவலிங்கம் சென்றுள்ளார். அப்போது, காரை கடத்தி அங்கிருந்து இளைஞர்கள் தப்பினர்.
இதுதொடர்பாக சிவலிங்கம் அளித்த புகாரின்பேரில், பெருமா நல்லூரை சேர்ந்த நந்தகுமார் (20), ஜெயராம் (20), குன்னத்தூரை சேர்ந்த சபரீஸ் (28) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை திருமுருகன்பூண்டி போலீஸார் கைது செய்தனர்.