Published : 06 Mar 2023 07:06 AM
Last Updated : 06 Mar 2023 07:06 AM
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16லட்சத்தை இழந்தவர், மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). ஜெராக்ஸ் இயந்திரத்துக்கான மை வியாபாரம் செய்துவந்தார். இவரது மனைவி ராதா(37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 3-ம் தேதி வெளியே சென்ற சுரேஷ், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை தேடிவந்தனர்.
இந்நிலையில், சுரேஷ் எழுதி வைத்திருந்த ஒருகடிதத்தில், "நான் ஆன்லைன்ரம்மி விளையாட்டால் பலலட்சம் இழந்துவிட்டேன். வாழத் தகுதியற்ற நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என்று எழுதியிருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சம் இழந்ததுதெரியவந்தது.
இந்நிலையில், நேற்று காலை மெரினா கடற்கரை அவ்வையார் சிலைபின்புறம் உள்ள கடல் பரப்பில் ஆண்சடலம் கரை ஒதுங்கியது. மெரினா போலீஸார் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், அது மாயமான சுரேஷ் என்பதும், அவர்கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ``சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். நண்பர்கள், உறவினர்கள் என பல தரப்பினரிடம் கடன் பெற்று விளையாடியுள்ளார். இதில் ரூ.16 லட்சம் வரை இழந்ததால், விரக்தியடைந்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தால், இரு தினங்களுக்கு முன் கிழக்கு தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலரும் பணத்தைஇழந்து, தற்கொலை செய்துகொள்வது தொடர்வதால், உடனடியாக ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றுகோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT