Published : 06 Mar 2023 06:47 AM
Last Updated : 06 Mar 2023 06:47 AM
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அம்புரோஸ். இவரிடம் பட்டா மாறுதலுக்காக அப்பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் கொடுத்த சான்றிதழ்களை அம்புரோஸ் சரிபார்த்துள்ளார். அப்போது, அவை போலியானவை என தெரியவந்தது. இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் அம்புரோஸ் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீஸார் மார்ட்டினை வரவழைத்து விசாரித்தபோது, வாளாடி அக்ரஹாரம் கே.என்.நகர் 1-வது தெருவைச் சேர்ந்த குமார் என்ற குமரவேல்(46) என்பவரிடம் சான்றிதழ்களை வாங்கியதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, குமரவேலுவை வரவழைத்து போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்ததும், அதை வைத்துக் கொண்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக முத்திரைத்தாள், பிறப்பு- இறப்பு சான்றிதழ், அரசு அலுவலர்களின் முத்திரை ஆகியவற்றை போலியாக தயாரித்து, பிறருக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துதல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குமரவேலை கைது செய்தனர்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களின் முத்திரைகள் உட்பட 17 வகையான போலி முத்திரைகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், மார்ட்டினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT