Published : 05 Mar 2023 04:10 AM
Last Updated : 05 Mar 2023 04:10 AM
சென்னை: ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்திருந்தார்.
அதில், ‘கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் ரவி. சில தரகர்களால் எனக்கு அறிமுகமான ரவி,பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்தார். அவரது பேச்சை நம்பிய நான், அரசு வேலை வாங்குவதற்கு ரூ.11 லட்சம் பணத்தை ரவியிடம் கொடுத்தேன்.
பணத்தை பெற்றுக் கொண்ட பிறகு அவர் எனக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் நான் பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால், அவர் பணத்தை திருப்பித் தராமல், என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். எனவே ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், ரவி பணத்தை பெற்றுக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ரவி மற்றும் தரகர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக ரவியும், தரகராகச் செயல்பட்ட விஜய் என்பவரும் கைது செய்யப்பட்டதாக மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரவி, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிட நலத் துறையில் உதவி பிரிவு அலுவலராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT