

கோவை: கோவையில் இளைஞரை சுட்டுக்கொல்ல பயன்படுத்தியது சீன நாட்டு துப்பாக்கி என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த சத்தியபாண்டி(31) என்பவர், கடந்த மாதம் 12-ம் தேதி கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், திரையரங்கு கட்டப் பஞ்சாயத்து விவகாரத்தில் சத்தியபாண்டி கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கோவை தீத்திபாளையத்தைச் சேர்ந்த காஜா உசேன்(24), மணிகண்டன்(25), செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சஞ்சய்குமார்(23), அல்ஜபீர்கான், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த ஆல்வின்(37) மற்றும் சஞ்சய் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீஸார், ஜே.எம்.3 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை 5 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்ததையடுத்து, தனியிடத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மாநகர போலீஸார் கூறும்போது, ‘‘சத்தியபாண்டி கொல்லப்பட்டபோது ஒரு துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கும்பலிடம் மேலும் ஒரு துப்பாக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 2 துப்பாக்கிகளையும் கண்டறிந்து பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு துப்பாக்கிகளும் சீன நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். சில லட்ச ரூபாய் செலவழித்து இடைத்தரகர்கள் மூலம் இவற்றை வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. துப்பாக்கி எப்படி வாங்கப்பட்டது, அதற்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சஞ்சய் ராஜாவிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
56 ரவுடிகள் கைது: மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கோவையில் 56 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 4 ரவுடி கும்பல்கள் கண்டறியப்பட்டு அவர்களின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ரத்தினபுரியைச் சேர்ந்த ரவுடி கவுதம் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு, 8 அடிதடி வழக்குகள், 7 கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. 7 பிடிவாரண்ட்கள் நிலுவையில் உள்ளன. கவுதம் கல்லூரி மாணவர்களை மிரட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி வருமானம் ஈட்டி வந்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரை 2 தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். விரைவில் அவர் பிடிபடுவார்.
ஆயுதங்களுடன் வீடியோக்களை வெளியிட்டிருந்த சில ரவுடிகளின் ‘இன்ஸ்டாகிராம்’ பக்கங்கள் கண்டறியப்பட்டு அவற்றை முடக்க மெட்டா நிறுவனத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்று மோதலை ஏற்படுத்தும் வகையில் வெளியிடும் பதிவுகளுக்கு லைக் செய்தும், அதை உற்சாகப்படுத்தும் வாசகங்களை பதிவிடும் நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளை மையப்படுத்தி கூடுதல் வீதி நூலகங்கள் ஏற்படுத்தப்படும். போலீஸ் கிளப் தொடங்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்’’ என்றார்.