

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முக்கிய நபரை, கோலாரில் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில், ஹரியாணா மாநிலம் மேவாத் கொள்ளை கும்பல் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சத்தை கொள்ளையடித்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் காரில், ஆந்திர மாநிலம் சித்தூர் நான்குமுனை சந்திப்பு வழியாக கர்நாடக மாநிலம் கோலார் பகுதிக்கு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து பிரிந்து சென்றது, தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, ஹரியாணாவில் முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரை கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதியும் மற்றும் கோலாரில் குதரத் பாஷா, அப்சர் உசேன் ஆகியோரை கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர், 7 நான் போலீஸ் காவல் விசாரணை முடிந்து, வேலூர் மத்திய சிறையில் கடந்த 28-ம் தேதி மீண்டும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது நிஜாம் என்கிற நிஜாமுதீன் என்பது தெரியவந்துள்ளது. இவரது நடமாட்டம் குறித்து முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், கோலாரில் பதுங்கிருந்த நிஜாமுதீன் இருப்பிடத்தை கண்டறிந்த தனிப்படை போலீஸார், அவரை நேற்று (மார்ச் 1) கைது செய்தனர். இவரிடம் முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே, ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்த்துள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட ரூ.73 லட்சத்தில், முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோரிடம் இருந்து ரூ.3 லட்சம் மீட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ரூ.70 லட்சத்தின் நிலை என்பது மர்மமாக உள்ளன. இதனிடையே, கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டாலும், ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை முழுமையாக மீட்பதில், தனிப்படை போலீசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.