

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பல்லக்கிலிருந்து வெள்ளி தகடு திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மகத்தையொட்டி கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து 5 வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா புறப்பாடும் நடைபெற்று வருகிறது.
வழக்கம் போல் காலை புறப்பாடு நடைபெற்று, பல்லக்கு கோயிலிலுள்ள அங்க மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, பல்லக்கில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளி தகட்டினை மர்ம நபர் திருடுவதை கோயில் ஊழியர் டி.செல்வம் பார்த்து, அவரை கையும் களவுமாகப் பிடித்து கோயில் அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்ததின் பேரில், போலீஸார் கோயிலுக்குச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கும்பகோணம் பழைய அரண்மனைக்காரத் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் மணிவண்ணன் என்பது தெரிய வந்ததையடுத்து, திருடிய வெள்ளி தகட்டினை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், 5 வெள்ளி பல்லக்கிலிருந்த வெள்ளி தகடுகள் திருட்டுப் போயுள்ளதையும் கண்டுபிடித்து மீட்டெடுக்க வேண்டும் என செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தால் கோயில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.