

மதுரை: கைதிகளுக்கான உணவுப் பொருட்களில் முறைகேடு செய்த உசிலம்பட்டி கிளைச் சிறை உதவி ஜெயிலரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை மத்திய சிறை நிர்வாகத்தின் கீழ், உசிலம்பட்டி கிளைச் சிறை செயல்படுகிறது. இங்கு உதவி ஜெயிலராக கே.கண்ணன் என்பவர் பணிபுரிகிறார். ஒவ்வொரு கைதிக்கும் சிறைத் துறை நிர்வாகத்தால் உணவுப் பொருள் நிர்ணயிக்கப்பட்டு வாங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், உசிலம்பட்டி கிளைச் சிறையில் கைதிகளுக்கான உணவு பொருட்களை முறையாக வாங்காமலும், வாங்கிய பொருட்களையும் முழுமையாக பயன்படுத்துவதில்லை. கைதிகளுக்கு தேவையான அளவு உணவு வழங்குவதில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக மதுரை சிறைத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து சிறைத் துறை டிஜிபி அம்ரேஷ்பூசாரியின் அறிவுறுத்தலின்பேரில், மதுரை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் உசிலம்பட்டி கிளைச்சிறைக்கு சென்றார். கைதிகளுக்கென வாங்கும் உணவு பொருட்கள் பட்டியலை ஆய்வு செய்தார். இதில் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது.
மேலும், சிறை வளாகத்திலுள்ள பயனற்ற செப்டிக் டேங்கிற்குள் மிச்சப்படுத்திய அரசி, பருப்பு, நிலக்கடலை உள்ளிட்ட மளிகை பொருட்களை மறைத்து வைத்திருப்பதையும் கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து உதவி ஜெயிலர் கண்ணனை சஸ்பெண்ட் செய்து, கூடுதல் கண்காணிப் பாளர் வசந்தக்கண்ணன் உத்தரவிட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.