

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சார்ந்த பாலாஜி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீஸார் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில் விசாரணை முடிந்து நேற்று அளித்த தீர்ப்பில் பாலாஜி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.