விக்கிரவாண்டி அருகே மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை? - 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை

விக்கிரவாண்டி அருகே மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை? - 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவரும், சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மாணவியும் சிந்தாமணியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், மாணவரை தலையில் கத்தியால் வெட்டி தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. ஏரிக்கரையில் மயங்கிக் கிடந்த இருவரையும் கிராம மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் டிஐஜி பாண்டியன் மற்றும் எஸ்.பி. நாதா தலைமையிலான போலீஸார் நேற்று சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன், மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

எஸ்.பி. விளக்கம் இதையடுத்து எஸ்பி ஸ்ரீநாதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி சிந்தாமணி கிராமம். நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி - கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் 17 வயது நிரம்பிய ஆண், பெண் தனிமையில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த 3 நபர்கள், அவர்களிடமிருந்த செல்போன், வெள்ளி சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதில் ஒரு நபர் மட்டும் பெண்ணை தாக்கி, பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றார்.

பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து புகார் பெறப்பட்டு விக்கிரவாண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாக எவ்வித தகவலும் இல்லை. மேலும் குற்றச் சம்வத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸார் 12 நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளித்து, குற்றவாளிகள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in