

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஆன்லைன் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
கும்பகோணம், பாணாதுறை பகுதியில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடந்து வருவதாகத் தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையிலான போலீஸார், அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களுள் தஞ்சாவூர், கீழவாசலைச் சேர்ந்த ஜான் சர்ச்சில் (என்கிற) ராஜா (43) மற்றும் பட்டீஸ்வரம், உடையாளூரைச் சேர்ந்த ரேவதி (என்கிற) ரம்யா (35) ஆகிய 2 பேரும் பாலியல் தொழில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதனையடுத்து, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் மற்றும் போலீஸார், அவர்கள் 2 பேர் மீது வழக்குப் பதிந்து, 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டு, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.