சென்னை அமைந்தகரையில் போக்குவரத்து காவலரை தாக்கிய திமுக பிரமுகர் கைது

சென்னை அமைந்தகரையில் போக்குவரத்து காவலரை தாக்கிய திமுக பிரமுகர் கைது
Updated on
1 min read

சென்னை: அமைந்தகரையில் போக்குவரத்து காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் முத்துச்செல்வன் (40). இவர் அண்ணாநகர் போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு இவர்பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அமைந்தகரை என்.எஸ்.கே நகர் பேருந்து நிறுத்தம் அருகே செல்லும்போது முதியவர் ஒருவர் மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

இதை கவனித்த முத்துச்செல்வன் தனது இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கி முதியவரை எச்சரித்து அங்கிருந்து கிளம்பச் செய்தார். மேலும், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார். அப்போது, அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இறங்கி வந்த நபர் ஒருவர், காவலர் முத்துச்செல்வனிடம் நீ யார் இதை செய்ய எனக் கூறி வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த அந்த நபர் காவலர் முத்துச்செல்வனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதை சற்றும் எதிர்பாராத காவலர், இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் போக்குவரத்து காவலர் முத்துச்செல்வனை தாக்கியது அமைந்தகரையைச் சேர்ந்த கண்ணன் (44) என்பதும், இவர்திமுகவில் இலக்கியப் பேரவை பிரிவில் நிர்வாகியாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தாக்குதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துகண்ணனை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in