Published : 24 Feb 2023 06:55 AM
Last Updated : 24 Feb 2023 06:55 AM
பூந்தமல்லி: சென்னை, கொரட்டூரில் பல் மருத்துவக் கல்லூரி மாணவரை கொன்ற இரு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து, தீர்ப்பு அளித்துள்ளது பூந்தமல்லி-கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் தர்மராஜா தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (27). இவர் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், எம்.டி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ராஜசேகர் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இரவு, சென்னை, கொரட்டூரில் உள்ள தனியார் கல்லூரி அருகில் தள்ளுவண்டி கடையில் சிற்றுண்டி வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிற்றுண்டி வாங்குவது தொடர்பாக ராஜசேகருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தையை சேர்ந்த ரஞ்சித் மகிமன் என்கிற மகிமன் (35), பிரிட்டோ (28), கொரட்டூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பிரபு (23) ஆகியோருக்கும் இடையே வீண் தகராறு ஏற்பட்டது.
அதில், ரஞ்சித் மகிமன் உள்ளிட்டோர் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ராஜசேகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, கொரட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி- கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்- 3-ல் நடைபெற்று வந்தது. முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், ரஞ்சித் மகிமன், பிரபு ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது; பிரிட்டோ மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
இதனையடுத்து, பூந்தமல்லி- கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்- 3-ன் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு அளித்தார்.
அத்தீர்ப்பில், ராஜசேகரை கொலை செய்த குற்றத்துக்காக, ரஞ்சித் மகிமன், பிரபு ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும், ரஞ்சித் மகிமனுக்கு ரூ.7,500, பிரபுக்கு ரூ.5 ஆயிரம் என, அபராதமும் விதித்துள்ளார். மேலும், குற்றம் நிரூபிக்கப்படாததால், பிரிட்டோ இந்த கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT