

கோவை: கோவையில் வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து வர்த்தக சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றி விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கூடுதல் டிஜிபி அருண் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மேனகா, எஸ்.ஐ அர்ஜூன் குமார், பறக்கும்படை துணை வட்டாட்சியர் முத்துமாணிக்கம் ஆகியோர் குரும்பபாளையம் குறிஞ்சி நகரில் உள்ள ஒரு ஷெட்டில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.
அப்போது, வீட்டு உபயோக சிலிண்டரில் இருந்து பிரத்யேக கருவி மூலம் எரிவாயுவை வர்த்தக சிலிண்டருக்கு மாற்றி நிரப்பிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த ராஜா(40), ஜோஸ்வா டேனியல்(25) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் எரிவாயு ஏஜென்சியில் விற்பனையாளர்களாக பணியாற்றி வருவதும், எரிவாயுவை மாற்றி கடைகள் மற்றும் பேக்கரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து, 117 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.