

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் இருவரை 7 நாள் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை முதலாவது நீதித்துறை நடுவர்மன்ற மாஜிஸ்திரேட் கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்களை பிடிக்க களமிறங்கினர்.
விசாரணையில், கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் ஹரியாணா மாநிலம் மேவாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க ஹரியாணா மாநிலம் சென்ற தனிப்படையினர் மேவாத் பகுதியில் பதுங்கியிருந்த முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோரை கடந்த 17-ம் தேதி கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், இருவரையும் 10 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி திருவண்ணாமலை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில், மாஜிஸ்திரேட் கவியரசன் வீட்டில் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோரை ஆஜர்படுத்தினர். அப்போது, இருவரையும் 7 நாள் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பின்னர், இருவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றனர்.