Published : 23 Feb 2023 04:04 AM
Last Updated : 23 Feb 2023 04:04 AM

சென்னையில் போலீஸாரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற கொள்ளையன் மீது பெண் எஸ்.ஐ. துப்பாக்கிச்சூடு

ரவுடி சூர்யா வெட்டியதில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்கள் சரவணகுமார், அமானுதீன் ஆகியோரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நலம் விசாரித்தார். (கடைசி படம்) பெண் எஸ்.ஐ. மீனா. படங்கள்: ம.பிரபு

சென்னை: சென்னையில் போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை பெண் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார்.

சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர். இவர் கடந்த 20-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 4 போலீஸாருடன் அயனாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். ஒரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 3 பேரை நிறுத்தி விசாரிக்க முயன்றார். அப்போது, அந்த வாகனத்தில் கடைசியாக அமர்ந்திருந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் எஸ்.ஐ. சங்கரின் தலையில் பலமாக தாக்கினார்.

இதில், படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். சக போலீஸார் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய இளைஞர் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பினர்.

இச்சம்பவம் குறித்து அயனாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தியது பிரபல கொள்ளையனான புளியந்தோப்பு திருவிக நகர் பள்ளம் பகுதியை சேர்ந்த பெண்டு சூர்யா (எ) சூர்யா (22) என்பதும், அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தது திருநின்றவூர் நெமிலிச்சேரி கவுதம் என்ற மோகன் (20), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அஜித் என்ற பீக்கா (20) என்பதும் தெரியவந்தது.

கவுதம், அஜித் உடனடியாக கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த சூர்யாவை எஸ்.ஐ. மீனா தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கைது செய்தனர். அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அயனாவரம் காவல் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 11.30 மணி அளவில் குன்னூர் நெடுஞ்சாலையில் வரும்போது, சிறுநீர் கழிக்க வேண்டும் என சூர்யா கூறியுள்ளார். போலீஸார் அனுமதித்ததை அடுத்து, ஒதுக்குப்புறமாக சூர்யா சென்றுள்ளார். போலீஸார் அவருக்காக காத்திருந்தனர். அப்போது சூர்யா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸாரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், தலைமைக் காவலர் சரவண குமார், முதல்நிலை காவலர் அமானுதீனின் கை, கால்களில் வெட்டுக்காயம் விழுந்தது. காவலர் திருநாவுக்கரசு இதில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இதற்கிடையே, போலீஸாரின் அலறல் சத்தம் கேட்டு, காவல் வாகனத்தில் அமர்ந்திருந்த எஸ்.ஐ. மீனா உடனடியாக அவர்களை நோக்கி ஓடியுள்ளார். தனது கைத்துப்பாக்கியை எடுத்து, சூர்யாவை எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி சுட்டார். சூர்யா தப்பி ஓட முயன்றதால், அவரை நோக்கி எஸ்.ஐ. மீனா சுட்டார். இடதுகால் முட்டியில் குண்டு பாய்ந்ததில், ரவுடி சூர்யா கீழே விழுந்தார்.

பின்னர், கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். காயம் அடைந்த 2 போலீஸாருடன், ரவுடி சூர்யாவையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை
பெற்று வரும் 2 காவலர்களையும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சமீபத்தில் திருச்சியிலும் இதேபோல ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த நிலையில், திருட்டு, வழிப்பறி, தாக்குதல் உட்பட 14-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய சென்னை கொள்ளையன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது மற்ற ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் எஸ்.ஐ.க்கு பாராட்டு: சினிமா பாணியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனாவை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். முதன்முதலாக பெண் எஸ்.ஐ. துப்பாக்கிச்சூடு நடத்தி சாதனை படைத்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்.ஐ. மீனா கூறியபோது, ‘‘இயற்கை உபாதை கழிக்க அவசரமாக செல்ல வேண்டும் என ரவுடி சூர்யா கெஞ்சினார். இதனால், பரிதாபப்பட்டுதான் அனுமதித்தோம். ஆனால், அவர் திட்டமிட்டே அவ்வாறு செய்துள்ளார். அவர் தப்ப முயன்றதால் எச்சரித்தேன் அப்போதும் கேட்கவில்லை. வேறு வழியின்றி சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது’’ என்றார்.

செங்கல்பட்டை பூர்வீகமாக கொண்டவர் எஸ்.ஐ. மீனா (34). திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சிறந்த பணிக்காக இவர் ஏற்கெனவே 2 முறை காவல் ஆணையரிடம் பதக்கம், சான்றிதழ் பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x