

சென்னை: போதைப் பொருளாக உடல் வலிநிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பெருநகரில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை போலீஸார் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலைபகுதியில் சிலர் போதைப் பொருள்விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று, அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (32),சதீஷ் குமார் (27), சரத்குமார் (29),சஞ்சய்(21) என்பது தெரியவந்தது.
இவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி, அதை போதைப் பொருளாக சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 750 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான கார்த்திக் மீது ஏற்கெனவே 5 திருட்டு வழக்குகளும், சதீஷ்குமார் மீது 3 கொலை முயற்சி வழக்குகளும், சரத்குமார் மீது 3 கொலை முயற்சி வழக்கு உட்பட 5 குற்ற வழக்குகளும், சஞ்சய் மீது 3 கொலை முயற்சி வழக்கு உட்பட 8 குற்ற வழக்குகளும் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.