

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.1.30 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகேயுள்ள வையககளத்தூரைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (76). பிஎஸ்என்எல் ஒப்பந்ததாரர். இவர் நேற்று தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக, காரில் திருப்பத்தூரில் மதுரை சாலையில் உள்ள தேசிய வங்கிக்கு சென்றார். அங்கு ரூ.1.30 லட்சத்தை எடுத்து காரில் வைத்து விட்டு, அங்குள்ள கடையில் அரிசி வாங்கினார்.
அப்போது, மோட்டார் சைக் கிளில் வந்த 2 பேர் காரின் கண்ணாடியை உடைத்து, பையில் இருந்த ரூ.1.30 லட்சம், காசோலை புத்தகம், சேமிப்புக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இச்சம்பவம் நடந்ததால், அப்பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருப்பத் தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.