ரத்தக்கறை படிந்த பாய், சங்கிலி, பிரம்புகள்... - விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையிலான போலீஸார் ஆய்வு மேற்கொண்ட காட்சி
அன்பு ஜோதி ஆசிரமத்தில் சிபிசிஐடி எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையிலான போலீஸார் ஆய்வு மேற்கொண்ட காட்சி
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ரத்தக்கறை படிந்த பாய், சங்கிலி, மூங்கில் பிரம்புளை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றினர்.

விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 10ம் தேதி கெடார் போலீஸாரும், வருவாய்துறையினரும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவதும், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

இதனையடுத்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம பணியாளர்கள் 7 பேர் உள்ளிட்ட 9 பேர் கெடார் போலீஸாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் பல்வேறு சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியாகியதால் இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனையடுத்து, அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை மேற்கொள்ள விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் மற்றும் சிபிசிஐடி காவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தனிப்படை போலீஸார், விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா முன்னிலையில் சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதனையடுத்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு முதல்கட்ட விசாரணையை இன்று சிபிசிஐடி போலிஸார் தொடங்கினர்.

அதன்படி விழுப்புரம் சிபிசிஐடி எஸ்பி அருண் பாலகோபாலன் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் அன்பு ஜோதி ஆசிரமத்தில் விழுப்புரம் மண்டல தடய அறிவியல் துறையின் துணை இயக்குனர் சண்முகம் ஆகியோர் தீவிர சோதனை நடத்தி தடயங்களை சேகரித்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இச்சோதனைக்கு பின் முக்கிய ஆவணங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோரை கட்டிப்போட பயன்படுத்தப்பட்ட இரும்பு சங்கிலிகள், அடிக்க பயன்படுத்தப்பட்ட மூங்கில் பிரம்பு கழிகள், ரத்தம் படிந்த பாய், உடுத்திய துணிகள் மற்றும் மருந்து பொருட்களை கைப்பற்றி சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

இது குறித்து எஸ்பி அருண் பாலகோபாலன் கூறும்போது, "டிஜிபி உத்தரவின்படி மொத்த வழக்குகளில் 4 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் புதியதாக நேற்று எப்.ஐ.ஆர் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம். குற்றம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்து ஒருசில ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in