

கரூர்: தொழிலதிபரிடம் ரூ.3 கோடி பண மோசடி செய்த புகாரில் பைனான்ஸியர் அன்புநாதனை கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (40). தொழிலதிபரான இவரிடம் கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பைனான்ஸியரான சி.பி.அன்புநாதன் (52) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். மேலும் தனக்கு சொந்தமான குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் பிரகாஷை பங்குதாரராக சேர்ப்பதாகக்கூறி கடந்த 2020ம் ஆண்டு ரூ.2 கோடி பணம் பெற்றுள்ளார் அன்புநாதன்.
2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பங்குதாரராக சேர்க்காமலும், பங்குத்தொகை வழங்காமலும் அன்புநாதன் இருந்துள்ளார். இதனால் கடந்த 15 நாட்களுக்கு அன்புநாதனை சந்தித்த பிரகாஷ் அவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் துப்பாக்கி உள்ளதாக கூறி பிரகாஷை அன்புநாதன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் அன்புநாதன் மீது பிரகாஷ் நேற்று புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பைனான்ஸியர் அன்புநாதனை இன்று (பிப். 20 தேதி) கைது செய்து அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனை: அதிமுக பிரமுகர்களுக்கு நெருக்கமாக இருந்த அன்புநாதனுக்கு சொந்தமான அலுவலகம், கிடங்கு அய்யம்பாளையத்தில் இருந்தது. கடந்த 2016ம் சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது அவரது கிடங்குக்கு கவர்ன்மென்ட் ஆப் இந்தியா என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் நாள்தோறும் வந்து செல்வதாகவும் இதன் மூலம் தேர்தல் பணி பரிவர்த்தனை மேற்கொள்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து தேர்தல் பார்வையாளர், பறக்கும் படையினர், வருமானவரித்துறையினர், டிஆர்ஓ, எஸ்பி ஆகியோர் 2016ம் ஆண்டு ஏப். 22ம் தேதி அங்கு சோதனையிட்டனர். அப்போது, பத்து லட்சத்துக்கும் அதிகமான பணம், 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.