

அரசிகேரே: கர்நாடக மாநிலத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த ஐபோனை வாங்க பணம் இல்லாத காரணத்தால் அதை டெலிவரி செய்ய வந்த பிரதிநிதியை கொலை செய்துள்ளார் 20 வயதான இளைஞர் ஹேமந்த் தத். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட டெலிவரி பிரதிநிதியின் உடலை சுமார் நான்கு நாட்கள் வரை வீட்டிலேயே வைத்திருந்துள்ளார் ஹேமந்த் தத். தனது வீட்டுக்குள் வைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அஞ்ச்கோப்பல் ரயில் நிலையம் அருகே எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது யாருடையது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதில்தான் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிப்ரவரி 7-ம் தேதி அன்று கொலையாளி ஆர்டர் செய்த பயன்படுத்தப்பட்ட ஐபோனை டெலிவரி செய்ய லக்ஷ்மிபுரா பகுதிக்கு கொலை செய்யப்பட்ட டெலிவரி பிரதிநிதியான ஹேமந்த் நாயக் (வயது 23) சென்றுள்ளார். அந்த போனுக்கான தொகை ரூ.46,000 செலுத்துமாறு அவர் சொல்லியுள்ளார். அப்போதுதான் கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் வாக்குமூலத்தில் கொலையாளி ஹேமந்த் தத் தெரிவித்துள்ளார்.
கொலைக்கு பின்னர் நான்கு நாட்கள் வரை வீட்டிலேயே உடலை வைத்திருந்துள்ளார். பின்னர் சாக்குமூட்டையில் அடைத்து ரயில் நிலையம் அருகே வைத்து எரித்துள்ளார். அவர் பைக்கில் உடலை வைத்து, எடுத்து செல்லும் காட்சி அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.