

நாகப்பட்டினம்: காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று நாகை நகரப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அக்கரைப்பேட்டை மேம்பாலம் அருகே வந்த காரை மறித்து போலீஸார் சோதனை செய்தனர்.
இதில், காரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காரில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள், நாகை கீழவாஞ்சூரைச் சேர்ந்த ஜெகதீஷ்(32), இவரது மனைவி ரூபிணி (31), நாகை கோபிநாத் (38), தெற்கு பொய்கைநல்லூர் ராஜேஷ்(24), மகாலிங்கம்(44), மகேஸ்வரி(34) என்பதும், இதில், ரூபிணி, திருவாரூர் மாவட்டம் வைப்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை தனிப்படை போலீஸார், நாகை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நாகை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும், ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.